×

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை தைத் தேரோட்டம்

திருச்சி: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.  இன்று காலை நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு நடந்தது. திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தைத்தேரோட்ட திருவிழா 11 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தை தேரோட்ட திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி  தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றுவருகிறது. விழாவின் 7ம் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் பூந்தேர் அலங்காரத்தில் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்தார். பின்னர், ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி வந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

விழாவின் 8ம் நாளான இன்று (2ம் தேதி)  காலை 7.30 மணிக்கு பல்லக்கில் புறபட்டு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார்.  இரவு 7 மணிக்கு நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை தேரோட்டம் நாளை (3ம் தேதி) நடக்கிறது. அதனை முன்னிட்டு, நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு ரங்கா, ரங்கா கோபுரம் அருகே உள்ள தைத் தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வந்து சேருகிறார். அதன்பின்னர் காலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை ரதாரோஹணம் நடக்கிறது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தைத் தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

Tags : Shri Rangam Ranganadar Temple , Tait chariot procession tomorrow at Sri Rangam Ranganathar temple
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது